விராஜ்பேட்டையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி காயம்


விராஜ்பேட்டையில்  காட்டுயானை தாக்கி தொழிலாளி காயம்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விராஜ்பேட்டை அருகே காட்டுயானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

குடகு-

விராஜ்பேட்டை அருகே காட்டுயானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் பீதியடைந்துள்ள மக்கள் யானை நடமாட்டத்தை தடுக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்டுயானை நடமாட்டம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலி பெட்டா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அதிகளவு காபி தோட்டங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வந்து விளை பயிர்கள் மற்றும் காபி செடிகளை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது காபி தோட்ட உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள், காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்த முறை காபி தோட்டத்திற்கு சென்ற கூலி தொழிலாளியை காட்டுயானை தாக்கியது. தாக்குதலுக்கு உள்ளான கூலி தொழிலாளி பாலிபெட்டாவை சேர்ந்த பாபி (வயது 58) என்று தெரியவந்துள்ளது.

காட்டுயானை தாக்குதல்

இவர் மஸ்கல் பகுதியில் உள்ள காபி தோட்டத்திற்கு வேலைக்காக சென்றார். அப்போது காட்டுயானை ஒன்று காபி தோட்டத்திற்குள் வந்தது. இதை பார்த்ததும் கூலி தொழிலாளிகள் அலறி அடித்து ஓடினர். பாபியால் ஓட முடியவில்லை. காட்டுயானையிடம் சிக்கி கொண்டார். அவரை தும்பி கையால் காட்டுயானை தூக்கி வீசியதுடன் காலால் மிதித்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்காக போராடி கொண்டிருந்த அவரை சக கூலி தொழிலாளிகள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கூலி தொழிலாளிகள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கூலி தொழிலாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story