மைசூரு அரண்மனையில் தசரா பள்ளிக்கூடம் திறப்பு
மைசூரு அரண்மனையில் தசரா பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்களின் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
மைசூரு
மைசூரு தசரா விழா
மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதையொட்டி தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்டமாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை தலைமையில் 9 யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
அவைகளுக்கு நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானைக்கு தற்போது பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. யானைகளுடன் அவர்களது குடும்பத்தினரும் வந்துள்ளனர்.
தற்காலிக பள்ளிக்கூடம்
அவர்கள் அனைவரும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் பிள்ளைகளுக்கு அரண்மனை வளாகத்திலேயே பாடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரண்மனை நிர்வாகம் செய்து வந்தது. இந்த நிலையில் நேற்று அரண்மனை வளாகத்திலேயே தற்காலிக பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டது.
இந்த பள்ளிக்கூடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் 9 யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்களின் பிள்ளைகள் 19 பேருக்கு அந்த பள்ளியில் பாடம் நடத்தப்பட்டது.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்டமாக வரும் யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்களின் பிள்ளைகளும் இவர்களுடன் இணைந்து பாடம் கற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவ-மாணவிகளுக்கு சீருடை
இந்த தற்காலிக பள்ளியில் மைசூரு தாலுகா கூர்கள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வரும் சுப்புலட்சுமி, திவ்யா, பாத்திமா, மோசின் தாஜ் ஆகிய பேரும் பகுதி நேர அடிப்படையில் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆசிரியை சுப்புலட்சுமி தமிழர் ஆவார்.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இங்கு பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லித்தரப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆசிரியை சுப்புலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
19 ஆண்டுகளாக...
கடந்த 19 ஆண்டுகளாக நான் தசரா நேரத்தில் இங்கு வந்து யானைகளின் பாகன்கள், வளர்ப்பாளர்களின் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி வருகிறேன். கடந்த 19 ஆண்டுகளாக இந்த பணியை செய்ய கர்நாடக அரசு என்னை அனுமதித்து வருவதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தற்காலிக பள்ளிக்கூடத்தை நாங்கள் தசரா பள்ளிக்கூடம் என்று அழைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.