கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ முயன்ற ஷாரிக்
கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றுள்ளார். மேலும் ஆட்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மங்களூரு: கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றுள்ளார். மேலும் ஆட்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மங்களூரு குண்டுவெடிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து தீப்பிடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பயங்கரவாதி ஷாரிக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடக போலீசாாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், பயங்கரவாதி ஷாரிக் பற்றி தினந்தோறும் பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில் மங்களூருவில் கத்ரி கோவில் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
டார்க்நெட் இணையதளம்
இந்த நிலையில், ஷாரிக்கின் செல்போனில் சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் பேசிய 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. யூ-டியூப்பில் இருந்து அந்த வீடியோக்களை ஷாரிக் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ளார். ஜாகீர் நாயக்கின் பேச்சு, அவரை பயங்கரவாத செயலில் ஈடுபட தூண்டுகோலாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது செல்போனில், குக்கர் குண்டை கையில் வைத்து அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதாக உறுதி அளித்த வீடியோவும், வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்ற வீடியோவும் இருந்துள்ளது. மேலும் அவர் வெடிப்பொருட்களை வாங்கவும், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கவும் 'டார்க்நெட்' என்ற இணையதளத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் தங்களது இருப்பிடம், சுயவிவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவாகாது. இதனால் டார்க்நெட் இணையதளத்தை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
பயங்கரவாத அமைப்பு
மேலும் ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வனப்பகுதிக்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ ஷாரிக் முயன்றதாகவும் தகவல்கள் ெவளியாகி உள்ளது. மேலும் அவர், என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் பெங்களூரு சுத்தகுண்டேபாளையாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது மதீன் என்பவருடன் 'டார்க்நெட்' இணையதளம் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளில் பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 'டார்க்நெட்' இணையதளம் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிரிப்டோகரன்சி மூலமாக ஷாரிக்கிற்கு நிதிஉதவி வந்ததாகவும் தெரிகிறது.
சிவமொக்கா துங்கா நதி கரையோரத்தில் வெடிகுண்டு சோதனை நடத்திய பிறகு, ஷாரிக், ஆகியோர் பந்திப்பூா், குடகு, கேரளாவின் கண்ணூர், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய பகுதிகளில் 5 வனப்பகுதிகளுக்கு சென்று எடுத்த படங்கள், ஒரு மதத்தின் அமைப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அந்த அமைப்புகளின் தலைவர்கள் பற்றிய விவரங்களையும், படங்களை மதீனுக்கு 'டார்க்நெட்' மூலம் தகவல் அனுப்பியதாகவும் தெரிகிறது.
ஆட்களை சேர்க்க திட்டம்
இந்த 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்ைப நிறுவி, அந்த அமைப்புக்கு ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தலா 50 பேர் முதல் 100 பேரை சேர்க்கவும் ஷாரிக் திட்டமிட்டுள்ளார். அவர்களுக்கு அந்தந்த மாநில வனப்பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஒரு மதத்தின் அமைப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது நாசவேலைகளை அரங்கேற்றவும், அந்த அமைப்பின் தலைவர்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டி உள்ளார்.
ேமலும் தென்னிந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுடனும் ஷாரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சதி முறியடிப்பு
மேலும் சிவமொக்காவில் கடந்த ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தையொட்டி வீரசாவர்க்கர் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, ஒரு அமைப்பின் தலைவரை கொல்ல ஷாரிக்கும் அவரது கூட்டாளிகளும் சதி செய்திருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதில் ஷாரிக் தவிர அவரது கூட்டாளிகளான மாஸ் முனீரும், சையது யாசினும் போலீசில் சிக்கிக் கொண்டனர்.
அதன்பிறகும் மங்களூரு, சிவமொக்கா, உப்பள்ளியில் ஒரு அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுத்து கொலை செய்யவும் ஷாரிக் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.