ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளை நிர்மாணித்த இயற்கை ஆர்வலர் கல்மனே காமேகவுடா மரணம்
ஆடுகளை வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளை நிர்மாணித்த இயற்கை ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
மண்டியா,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்மனே காமேகவுடா. அவருக்கு வயது 84. இயற்கை ஆர்வலரான இவர், வெங்கட கவுடா-ராஜம்மா தம்பதியின் மகன் ஆவார்.
ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த இவருக்கு இயற்கை பாதுகாப்பு மீது அதிக அக்கறை இருந்துள்ளது. இதனால் மலவள்ளி அருகே குண்டூர் மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சொந்த செலவில் தனது தீவிர முயற்சியால் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிர்மாணித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்மேன காமேகவுடா வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மருத்துவ செலவை அரசு ஏற்றது. இதையடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தாசனதொட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் கல்மனே காமேகவுடா உடல் மோசமாகி மரணமடைந்தார்.
இவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி மற்றும் மந்திரிகள் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயற்கை ஆர்வலர் கல்மேன காமேகவுடாவின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தாசனதொட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கல்மனே காமேகவுடாவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.