பெங்களூருவில் காற்று மாசுபடுத்தல் அதிகரிப்பு
பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நவம்பர் மாதத்தில் 99 மைக்ரோ மீட்டராக பதிவாகியுள்ளது.
பெங்களூரு:-
வாகன போக்குவரத்து
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அனைவரும் ஐ.டி மற்றும் தொழில் நுட்ப பூங்கா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இங்கு அதிகளவு ஐ.டி.நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. இந்த நிறுவனங்களில் ஏராளமான மாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் பெங்களூருவிலேயே வசித்து வருகின்றனர். தினமும் இவர்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் அலுவலகத்திற்கு பயணித்து வருகின்றனர்.
இதனால் வாகன போக்குவரத்து அதிகரிப்பதுடன், வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சு புகையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நச்சு புகையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இந்நிலையில் நகரில் ஏற்படும் மாசு அளவை கணக்கீடு செய்வதற்காக சிட்டி ரெயில் நிலையம், ஹெப்பால், நிமான்ஸ், ஜெயநகர், சென்ட்ரல் சில்க் போர்ட்டு உள்பட 7 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பதிவாகும் காற்று தர குறியீட்டின் அடிப்படையில் மாசு கணக்கீடு செய்யப்படுகிறது.
காற்று மாசு
இந்த நிலையில் பெங்களூருவில் பதிவான காற்று மாசு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் பெங்களூருவில் மட்டும் 40 சதவீதம் அளவிற்கு காற்று அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர், வாகன போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், காற்று மாசு சற்று அதிகரித்து உள்ளது. பெங்களூருவில் ஹெப்பால், மைசூரு ரோடு, சிட்டி ரெயில் நிலைய பகுதி ஆகிய இடங்களில் காற்று அதிகளவு மாசடைந்து உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை காற்று மாசு கூடுதலாக பதிவாகி இருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 66 மைக்ரோ மீட்டராக மாசு பதிவானது. இந்த ஆண்டு நவம்பவர் மாதத்தில் அது 99 மைக்ரோ மீட்டராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.