ஜி-20 தலைமையை மிக சவாலான தருணத்தில் இந்தியா ஏற்றுள்ளது: மத்திய மந்திரி பேச்சு
உலக அரசியலில் மிக சவாலான தருணத்தில் ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது என்று மத்திய மந்திரி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஓராண்டுக்கான தலைமைத்துவம் இன்று முதல் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, அதன் முக்கியத்துவம் பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனையொட்டி, புதுடெல்லியில் ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு - இளம் மனங்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு இளைஞர்களின் மத்தியில் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அவர் பேசும்போது, இந்த தசாப்தத்தின் இறுதியில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நாம் இருப்போம். உலக அளவில் ஏறக்குறைய 3-வது பெரிய பொருளாதார நாடாகவும் நாம் நிச்சயம் இருப்போம்.
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த கூடிய உலகில், இந்த தசாப்தத்தின் முடிவில், 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும். நேரம் நமது பக்கம் உள்ளது.
கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், இந்தியாவின் மதிப்பை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. இது 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலை என அவர் கூறியுள்ளார். பிறருடன் இணக்கம் அதிகரிப்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கையாளும் ஒரு கூடுதலான நடைமுறை என்ற அளவிலான வளர்ச்சி இது கிடையாது.
அதற்கு மாற்றாக, இந்தியாவின் சொந்த வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்த கூடிய காலகட்டத்தில், உலக அரசியலில் மிக சவாலான தருணத்தில் ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றுள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புமிக்க கடமையாகும்.
இந்த ஜி-20 மாநாட்டை மிக வேறுபட்ட அளவில் நாம் நடத்த போகிறோம். அதற்கு இன்றைய நிகழ்ச்சி கூட ஒரு சான்றாக இருக்கும் என பேசியுள்ளார்.
இதன்பின்னர் அவர், சர்வதேச விவகாரங்களில் மிக நெருக்கடியான நேரத்தில் நம்முடைய தலைமைத்துவம் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றுகளால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக பேரழிவுகளை நாம் பார்த்தோம்.
இதுதவிர, மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டன. வளர்ந்து வரும் நாடுகளில் நிதி நிலைமையை அது கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதுபோக, உக்ரைன் போரால் ஏற்பட்ட விளைவுகள், குறிப்பிடும்படியாக, எரிபொருள், உணவு மற்றும் உரம் ஆகியவற்றை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.