டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்....!
டிசம்பர் 1 முதல் சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன.
மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதியும், ஆமதாபாத், குவாஹத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.