இந்தியா, எகிப்து இருதரப்பு வர்த்தகம் 5 ஆண்டுகளில் ரூ.97,967 கோடியாக இருக்கும்: பிரதமர் மோடி பேச்சு


இந்தியா, எகிப்து இருதரப்பு வர்த்தகம் 5 ஆண்டுகளில் ரூ.97,967 கோடியாக இருக்கும்:  பிரதமர் மோடி பேச்சு
x

இந்தியா, எகிப்து இடையே சைபர் பாதுகாப்பு, ஐ.டி., கலாசாரம் உள்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.



புதுடெல்லி,


நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாளைய தினம் கோலாகலமுடன் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் தயாராகி உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது 68) அழைக்கப்பட்டார்.

நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.

குடியரசு தின விழாவில் பங்கேற்க எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த எல்-சிசிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் எல்-சிசி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.), கலாசாரம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எகிப்து அதிபர் எல்-சிசி மற்றும் அவரது குழுவை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். நாளை குடியரசு தினத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ராணுவ அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பழமையான நாகரீகங்களை கொண்டவை. நமது நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஆழ்ந்த இருதரப்பு உறவுகளை நாம் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது என பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எகிப்து அதிபருடனான சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட உணவு வினியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி ஆலோசித்தோம்.

பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு உதவ கூடிய சைபர் இணையதளத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக நாம் ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். நமது இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்து உள்ளது.

எல்லை கடந்த பயங்கரவாதம் கட்டுப்படுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்து உள்ளன. கொரோனா பரவலின்போது தேவையான ஒத்துழைப்புடன் நாம் இணைந்து பணியாற்றினோம்.

இதேபோன்று, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் ரூ.97 ஆயிரத்து 967 கோடியை எட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.


Next Story