சோலார் சக்தி மூலம் பயன்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு...!
மக்கள் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதன் மூலம் வருமானமும் பெறுகிறார்கள்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
அந்த வகையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது. இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம்.
சோலார் சக்தி மூலம் பயன்பணத்தை மிச்சப்படுத்த முடியும். தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது.
விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை. இதேபோல் சூரிய சக்தி மூலம் பலர் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதன் மூலம் வருமானமும் பெறுகிறார்கள்.
சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது. இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளி பரிசாக அமைந்தது.
இன்று உலகமே இந்தியாவின் சாதனைகளை கண்டு வியந்து நிற்கிறது.
இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் திறக்கப்பட்டதும், புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.