உலகளாவிய கடின சூழலில் உணவு பணவீக்க மேலாண்மையை திறம்பட கையாண்ட இந்தியா; அறிக்கை தகவல்
உணவு பணவீக்கம் பல நாடுகளுக்கும் கவலை தரும் வகையில் இருந்தபோதும், அதனை குறைப்பதற்கான மேலாண்மை பணியை இந்தியா திறம்பட மேற்கொண்டது என உலக புள்ளியியல் அறிக்கை தெரிவிக்கின்றது.
புதுடெல்லி,
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவலால் பொருளாதாரம் சரிவடைந்தது. அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு உள்ளன.
இந்த சூழலில், கடந்த ஆண்டு திடீரென உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கி விட்டது. எனினும், போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும் சில நாடுகள் இறங்கி உள்ளன.
இந்த நிலையில், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதங்கள், அவற்றின் சகிக்கும் திறனை காட்டிலும் அதிகரித்து உள்ளன என்பது சுட்டி காட்டப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலுக்கு பின் பொருளாதார மீட்சிக்கு இந்த நாடுகள் போராடி வரும் சூழலில், உக்ரைன் பனிப்போரால் நிலைமை உலகளவில் நாடுகளை சிக்கலில் தள்ளியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பகுதிகளில், உணவு பணவீக்கம் முறையே 8.5 சதவீதம், 19.1 சதவீதம் மற்றும் 17.5 சதவீதம் என்ற அளவில் உள்ளன என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. லெபனான், வெனிசுலா, அர்ஜெண்டினா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முறையே 352 சதவீதம், 158 சதவீதம், 110 சதவீதம் மற்றும் 102 சதவீதம் என்ற அளவில் உணவு பணவீக்க விகிதங்களை கொண்டு உள்ளன.
எனினும், உணவு பணவீக்க விகிதங்களை இந்தியா திறம்பட கையாண்டு உள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசக கவுன்சிலின் உறுப்பினரான பேராசிரியர் ஷமிகா ரவி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதனுடன், உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள பல்வேறு நாடுகளின் உணவு பணவீக்கம் பற்றிய தரவுகளையும் அதற்கு சான்றாக இணைத்து உள்ளார்.
இவற்றில் 5 சதவீதத்திற்கு குறைவான உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் வரிசையில், கடைசி 6 இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது கவனிக்கத்தக்கது.
இதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை நிர்வகிக்கும் வகையிலும், அதனுடன் உக்ரைன் போர் சூழலில், அண்டை நாடுகள் மற்றும் ஆபத்து நிலையிலுள்ள நாடுகளின் தேவைகளுக்காக, கடந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கோதுமை ஏற்றுமதியானது, தடை பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு, அது இன்றளவும் நடைமுறையிலும் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு உலகளவில் கோதுமை விலை கணிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் ஏற்ற, இறக்கத்துடன் மோசமடைந்து காணப்பட்டது. ஏனெனில், போர் நடந்து வரும் உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுமே கோதுமை விநியோகத்தில் முன்னணியில் உள்ளன.