இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ராஜ்நாத் சிங்குடன் இஸ்ரேல் மந்திரி ஆலோசனை


இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ராஜ்நாத் சிங்குடன் இஸ்ரேல் மந்திரி ஆலோசனை
x

இந்தியா-இஸ்ரேல் தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் பொருட்டு, ஒரு தொலைநோக்குப் பார்வையிலான ஒரு அறிக்கையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

புதுடெல்லி,

இஸ்ரேல் மந்திரி பெஞ்சமின் காண்ட்ஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இஸ்ரேல் மந்திரி பெஞ்சமின் காண்ட்ஸ் உடன் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா-இஸ்ரேல் தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் பொருட்டு, ஒரு தொலைநோக்குப் பார்வையிலான ஒரு அறிக்கையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், "இருதரப்பு சந்திப்பின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய சூழல்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளும் 'பார்வை அறிக்கையை' ஏற்றுக்கொண்டன. இது எதிர்காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பரந்த ஒருமித்த கருத்து உள்ளது" என்று டுவிட்டரில் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ராணுவத் தளவாடங்களை அதிகம் வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு பல்வேறு ஆயுத அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story