கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!


கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!
x
தினத்தந்தி 20 Sept 2023 3:05 PM IST (Updated: 20 Sept 2023 10:03 PM IST)
t-max-icont-min-icon

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும், கவனமாக இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு இந்தியர்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் முழு விவரம்:-

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை இந்தியா தடை செய்த அமைப்புகளாக அறிவித்துள்ளது. அதேவேளை, பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது.

பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். மேலும், கனடாவில் இருந்தவாறு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த ஜூன் 18ம் தேதி கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலம் அருகே ஹர்தீப் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ இந்தியா வருகை தந்தார். அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டுமென டிரூடோவிடம் பிரதமர் மோடி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். இது இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

மோதல் முற்றிய நிலையில் கனடா வர்த்தகத்துறை மந்திரியின் இந்திய பயணமும் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் கனடா நாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின், கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால், கனடா பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்ட அதிகாரி இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' உளவுப்பிரிவின் உயர் அதிகாரி பவான்குமார் என்பது தெரியவந்துள்ளது. கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடா நாட்டு தூதரக உயர் அதிகாரி 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story