இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில்; பிரதமர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரெயில் சேவையை இரு நாட்டு பிரதமர்களும் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளனர்.
புதுடெல்லி,
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரெயில் போக்குவரத்து சேவையை தலைவர்கள் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதன்பின்பு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசண்டா முன்னிலையில் நடைபெற்றன.
இதுபற்றி பிரதமர் மோடி ஊடகங்களின் முன் பேசும்போது, போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டு உள்ளன. மக்களின் இணைப்பை அதிகரிக்க புதிய ரெயில் வழிகளை நாம் நிறுவியுள்ளோம்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகால மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது நமது நாடுகளின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரும்.
இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என பேசியுள்ளார்.