உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவிற்கு 46-வது இடம் - பிரதமர் மோடி பெருமிதம்
நமது நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 2-ம் நாளான இன்று, நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்க ஏதுவாக அறிவியல் மாநாடு நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட மையப் பொருட்களில் அமர்வுகள் நடக்கிறது. பின்னர், மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
மத்திய- மாநில அறிவியல் மாநாடு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, இந்தியா நான்காவது தொழில் புரட்சியை வழிநடத்திச் செல்லும் நிலையில், இந்தியாவின் அறிவியல் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய மக்களின் பங்கும் மிக முக்கியமானது என்றார்.
நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாம் கொண்டாடும் போது, அறிவியல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும். அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியின் தொலைநோக்கு பார்வையுடன் நம் அரசு முன்னேறி வருகிறது.
2014-ல் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சியால், 2015-ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், தற்போது 46வது இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்திற்கு விரைவாக தங்களை மாற்றியமைத்து வருகின்றனர். அவர்களை முழு பலத்துடன் ஆதரிக்க வேண்டும்.
இந்த அமிர்த காலில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து சிறந்த நடைமுறைகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். நாட்டில் அறிவியல் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.