இந்தியா, தசாப்த முடிவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருமாறும்; நியூசிலாந்தில் மத்திய மந்திரி பேச்சு
நியூசிலாந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர், கொரோனா தடுப்பூசிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்து இந்தியர்களுக்கும், பிற நாடுகளுக்கும் அளித்தோம் என பேசியுள்ளார்.
ஆக்லாந்து,
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம்.
எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம் என கூறியுள்ளார்.
இந்த உரையின்போது, ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறியதுடன், ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கையிலெடுத்து கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விசயம் என கூறியுள்ளார்.
5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில், 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என்றும் உரையின்போது, மத்திய மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார்.