சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இ-பாஸ்போர்ட் - மத்திய அரசு நடவடிக்கை!


சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இ-பாஸ்போர்ட் - மத்திய அரசு நடவடிக்கை!
x

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட்டுகளை (மின்னணு பாஸ்போர்ட்டுகளை) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுடெல்லி,

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட்டுகளை (மின்னணு பாஸ்போர்ட்டுகளை) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும் இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

பாஸ்போர்ட் சேவா திவாஸ் தொடர்பான விழாவில் பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், "மத்திய பாஸ்போர்ட் அமைப்புடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நம் நாட்டு குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை சரியான நேரத்தில், நம்பகமான, அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரங்களிலும் பாஸ்போர்ட் சேவைகள் அதே வீரியம் மற்றும் உற்சாகத்துடனும் வழங்கப்பட்டன என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தொற்றுநோயால் அதிகரித்த தேவையை கையாளும் போது, கடந்த ஒரு மாதத்தில் 4.50 லட்சம் கூடுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், சராசரியாக 9 லட்சம் என்ற மாதாந்திர சராசரியுடன் சாதனை படைக்கப்பட்டு உள்ளது" என்றார்.

மேலும், பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக வெகுவிரைவில் பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0-ஐ தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரப்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட்-போட், அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான அனுபவத்தை உறுதி செய்யும்.

இதற்கிடையில் தான் சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்திய குடிமக்களுக்கான இ-பாஸ்போர்ட்டுகளை வெளியிடவும் அமைச்சகம் தயாராகி வருவதாக அவர் கூறினார்.


Next Story