இந்தியாவின் மிக நீண்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
இந்தியாவின் மிக நீண்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் 246 கி.மீ. வழித்தடத்தை பிரதமா் மோடி (இன்று) ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.
புதுடெல்லி,
பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
டெல்லி-மும்பை விரைவுச் சாலை 1,386 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையாகும். இது டெல்லி-மும்பை இடையிலான தொலைவை 12 சதவீதம், பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கும்.
இந்தச் சாலை டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும். கோட்டா, இந்தூா், ஜெய்ப்பூா், போபால், வதோதரா, சூரத் போன்ற நகரங்களை இணைக்கும். முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும்.
இந்தச் சாலையின் டெல்லி-டெளசா (ராஜஸ்தான்)-லால்சோட்(ராஜஸ்தான்) பகுதிகளை இணைக்கும் 246 கி.மீ. நீள வழித்தடப் பணிகள் முதலில் நிறைவடைந்தது. ரூ.12,150 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ள அந்த வழித்தடத்தை பிரதமா் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கிறாா். இந்த வழித்தடம் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா் செல்லும் நேரத்தை 5-இல் இருந்து மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும். அத்துடன் வழித்தடம் உள்ள ஒட்டுமொத்த மண்டலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.