இந்தியாவின் வலிமை அதன் பன்முக தன்மையில் இருக்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் வலிமை அதன் பன்முக தன்மையில் இருக்கிறது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 101-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நடந்தது.
இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் வலிமை அதன் பன்முக தன்மையில் இருக்கிறது. நம்முடைய நாட்டில் பார்ப்பதற்கு என பல விசயங்கள் உள்ளன. இதனை கவனத்தில் கொண்டே, யுவசங்கம் என்ற திறன் வாய்ந்த திட்ட நிகழ்ச்சியை கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கருத்துருவானது, மக்களுடனான மக்களின் பிணைப்பை அதிகரிப்பதுடன், நாட்டின் இளைஞர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படும் வாய்ப்பை வழங்குவதும் ஆகும்.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உயர் கல்வி அமைப்புகள் அதனுடன் இணைந்து உள்ளன என அப்போது அவர் கூறியுள்ளார்.
யுவசங்கத்தின் முதல் சுற்றில், நாட்டில் உள்ள 22 மாநிலங்களுக்கு 1,200 இளைஞர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக சென்று திரும்பிய ஒவ்வொருவருக்கும், உள்ள நினைவுகள், அவர்களது வாழ்வின் மீதமுள்ள நாட்களில் தொடர்ந்து மனதில் பதிந்து இருக்கும் என கூறியுள்ளார்.