பெங்களூருவில் 243 வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் மீண்டும் செயல்பட ரூ.335 கோடி தேவை?


பெங்களூருவில் 243 வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் மீண்டும் செயல்பட ரூ.335 கோடி தேவை?
x

பெங்களூருவில் 243 வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் செயல்படுவதற்கு ரூ.335 கோடி தேவை என்று மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

பெங்களூரு:

மூடப்பட்ட இந்திரா உணவகங்கள்

கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஏழை மக்களுக்காக இந்திரா மலிவு உணவகங்களை தொடங்கி இருந்தார். இது சித்தராமையாவின் கனவு திட்டமாகும். ஆனால் கடந்த கூட்டணி ஆட்சியிலும், பா.ஜனதா ஆட்சியிலும் இந்திரா உணவகங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இந்திரா உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருப்பதாலும், முதல்-மந்திரியாக சித்தராமையா மீண்டும் பதவி ஏற்றிருப்பதாலும் இந்திரா உணவகங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்தும் இந்திரா உணவகங்கள் மீண்டும் செயல்படுவதற்கான பணிகளை துவங்கி உள்ளார்.

ரூ.335 கோடி தேவை

இந்த நிலையில், பெங்களூருவில் இந்திரா உணவகங்கள் எப்போதும் போல் செயல்படுவதற்கும், அங்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், 3 நேரமும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கவும் ஏறக்குறைய ரூ.335 கோடி தேவை என்று மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இருக்கும் 198 வார்டுகளில், 175 வார்டுகளில் இந்திரா உணவகங்களும், 23 வார்டுகளில் நடமாடும் உணவகங்களும் உள்ளன.

175 வார்டுளிலும் இந்திரா உணவகங்களை புனரமைக்க தலா ரூ.15 கோடி தேவையாகும். அதே நேரத்தில் தற்போது 198 வார்டுகளில் இருந்து 243 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீதி 45 வார்டுகளில் இந்திரா உணவகங்கள் புதிதாக திறக்க தலா ஒரு வார்டுக்கு ரூ.20 கோடி தேவைப்படும் என அதிகாரிகள் மதிப்பீட்டு உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ரூ.335 கோடி தேவையாகும். அந்த ரூ.335 கோடி நிதியை அரசு ஒதுக்கும்பட்சத்தில் இந்திரா உணவகங்கள் மீண்டும் எப்போதும் செயல்பட வாய்ப்புள்ளது.


Next Story