இந்தோ-பசிபிக் முத்தரப்பு வளர்ச்சி திட்டத்திற்கு ஒத்துழைப்பு - இந்தியா, பிரான்ஸ் ஒப்புதல்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முத்தரப்பு வளர்ச்சி திட்டங்களுக்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சார்பில் நட்பு ரீதியான வாழ்த்தை பிரதமரிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முத்தரப்பு வளர்ச்சி திட்டங்களுக்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு, சர்வதேச சவால்கள் மற்றும் மூலோபாய கூட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து பேசிய கேத்தரின் கொலோனா, உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் மோசமான போரின் விளைவுகளை எதிர்கொண்டு சமாளிக்க இந்தியாவுடன் இணைந்து பிரான்ஸ் அரசு செயல்பட தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.