தகுதி இல்லாத 4 ஆயிரம் பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து


தகுதி இல்லாத 4 ஆயிரம் பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் தகுதி இல்லாத 4 ஆயிரம் பி.பி.எல். ரேஷன் கார்டுகளை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு :-

பி.பி.எல். ரேஷன் கார்டுகள்

கர்நாடகத்தில் அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு பி.பி.எல். ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகுதியில்லாத நபர்களிடம் பி.பி.எல். கார்டுகள் இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடூர் தாலுகாவில் மொத்தம் 80 ஆயிரத்து 422 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 3 ஆயிரம் கார்டுகள் கடந்த 2021-2022-ம் ஆண்டில் நீக்கப்பட்டு, அந்த கார்டுகள் ஏ.பி.எல். கார்டுகளாக அதாவது வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளாக மாற்றி வழங்கப்பட்டது.

4 ஆயிரம் கார்டுகள் ரத்து

மேலும் அதில் 67 ஆயிரத்து 406 பி.பி.எல். கார்டுகள், 5 ஆயிரத்து 433 அந்தியோதயா கார்டுகள், 7 ஆயிரத்து 583 ஏ.பி.எல் கார்டுகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 4 ஆயிரம் பி.பி.எல். கார்டுதாரர்கள் கர்நாடக அரசு சார்பில் கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தலா ரூ.2 ஆயிரத்தை பெற விண்ணப்பித்து இருந்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது அந்த 4 ஆயிரம் பேரும் பி.பி.எல். கார்டுகள் வைத்திருக்க தகுதி இல்லாதவர்கள் என்பது தெரியவந்தது.

அதையடுத்து அந்த 4 ஆயிரம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டன. அவர்களது பி.பி.எல். கார்டுகளும் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடூர் தாலுகாவில் தகுதி இல்லாதவர்கள் வைத்திருந்த பி.பி.எல். ரேஷன் கார்டுகளை நீக்கி உள்ளோம்.

அதுதொடர்பாக அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் ரூ.25 லட்சம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது' என்று கூறினார்.


Next Story