ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை


ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
x

ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டனர்.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த நபரை சுட்டு வீழ்த்தினர். இதனால், இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தானியரின் செயல் முறியடிக்கப்பட்டது. சுடப்பட்ட பாகிஸ்தானியர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல், ஜம்முவின் இந்திரேஷ்வர் நகரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தார்.

அந்த நபரின் நடமாட்டத்தை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story