கா்நாடக சட்டசபை தேர்தலில் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்- கருத்து கணிப்பில் தகவல்


கா்நாடக சட்டசபை தேர்தலில் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்- கருத்து கணிப்பில் தகவல்
x

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

சட்டசபை தேர்தல்

கா்நாடகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசும் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க இப்போதில் இருந்தே தயாராகி வருகிறது. இதையடுத்து, தேசிய கட்சிகளான ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தனித்தனியாக கருத்து கணிப்புகளை நடத்தியது.

ஏற்கனவே பா.ஜனதாவினர் நடத்திய ஆய்வில், அக்கட்சிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று தெரியவந்திருந்தது. இதையடுத்து, அக்கட்சி தலைவர்கள் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் நடத்திய கருத்து கணிப்பில் அக்கட்சி 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்கு 120 தொகுதிகள்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் கன்னகோலு தலைமையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சி 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், பா.ஜனதா 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 25 தொகுதிகளிலும், 6 முதல் 8 சுயேச்சைகள் வெற்றி பெறுவார்கள் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், யார் முதல்-மந்திரியாக வர வேண்டும் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுனில் கன்னகோலு தலைமையில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மக்களிடம் எதற்காக காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வந்திருப்பதால், அக்கட்சியின் தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story