ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் கார்வார் வருகை
பழுது பார்க்கும் பணிக்காக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் கார்வார் கடற்படை தளத்திற்கு வருகை தந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் போர் பயிற்சியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு-
தீ விபத்து
நாட்டின் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா தற்போது கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே கடம்பா கடற்படை தளத்தில் உள்ளது. இந்த கப்பல் போர் திறன் சோதனையை இம்மாத இறுதியில் மேற்கொள்ள உள்ளது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மற்றும் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல்களின் திறனை வருகிற பருவமழைக்கு முன்பு கடற்படை சோதிக்க உள்ளது.
இதற்காக விக்ரமாதித்யா கப்பல் பழுது பார்ப்பதற்காக கார்வாரில் உள்ள கடம்பா கடற்படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் போர் பயிற்சியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுது பார்க்கும் பணியின்போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனவே, அதன்பின்னர் கப்பலின் செயல்திறன் ஆகியவை சோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பான அறிக்கை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும். இந்த கப்பலில் ஏற்கனவே ரஷிய மிக்-29கே விமானங்கள் உள்ளன, இந்த ஆண்டு இறுதிக்குள் விமானம் தாங்கி கப்பல்கள் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலுக்கு சில மைல் தொலைவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படும்.
கடற்படை முடிவு
விமானம் தாங்கி கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மற்றும் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகிய இரு கப்பல்களை நிறுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக கிழக்கு கடற்பரப்பின் கடற்படை தளமான விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட போர் எந்திரங்களை நிறுத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப் பெல் விரிகுடாவிலும், சென்னையின் வடக்கு பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியிலும் இந்திய கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் அனுமதி பெற இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. ஜனவரி இறுதிக்குள், இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் கடம்பா கடற்படை தளத்தில் இருந்து கடல் பகுதியில் பாதுகாப்புக்கு செல்ல உள்ளது.