கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரம்: போக்குவரத்து போலீசாரை திட்டிய இன்ஸ்பெக்டர்
கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீசாரை திட்டியதுடன், இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு: கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீசாரை திட்டியதுடன், இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்
பெங்களூரு சிக்கஜாலா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். இவர், சிக்கஜாலா பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை, உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழிமறித்தார்.
அப்போது அந்த கார் போக்குவரத்து விதிமீறியதாக ரூ.41 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டிய இருந்தது தெரியவந்தது. உடனே டிரைவரிடம், அபராதம் செலுத்தும்படி வெங்கடேஷ் கூறியுள்ளார். அப்போது தேவனஹள்ளி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தனக்கு தெரியும் என்றும், அவரிடம் பேசும்படியும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசிடம் டிரைவர் கூறியுள்ளார். ஆனால் ரூ.41 ஆயிரம் அபராதம் கட்டுவதற்கான ரசீதுவை டிரைவரிடம் வெங்கடேஷ் கொடுத்துள்ளார்.
உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
இதற்கிடையில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசை, இன்ஸ்பெக்டர் முத்துராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் என்று சொல்லியும், மரியாதை இல்லாமல் பேசுகிறாய், நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று திட்டியதுடன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசை மிரட்டும் துணியில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
ஆனால் இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், என்னை முடிந்தால் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசும் பதில் அளித்தார். போலீஸ் அதிகாரிகள் 2 பேரும், பதிலுக்கு பதில் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.