சர்ச்சைக்குரிய 'காளி' பட போஸ்டர்: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சர்ச்சைக்குரிய காளி பட போஸ்டர்: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jan 2023 4:45 AM IST (Updated: 21 Jan 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய ‘காளி' பட போஸ்டர் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

'காளி' சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டரை இயக்குனர் லீனா மணிமேகலை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என வக்கீல் வினீத் ஜிந்தால், இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா உள்ளிட்டோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

அதையடுத்து, சர்ச்சைக்குரிய 'காளி' பட போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக டெல்லி போலீஸ், மத அடிப்படையில் வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், மதத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தல் ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுபோல உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராகவும், வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் லீனா மணிமேகலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால், மனுதாரர் இயக்கும் காளி குறும்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை. காளியை அனைத்து வடிவங்களிலும் உள்ளடக்கி காட்டும் நோக்கத்தில்தான் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. போபாலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு எதிராக 'லுக்அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ரிட் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு செய்யப்படவுள்ள வழக்குகளில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்து, விசாரணையை பிப்ரவரி 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story