சர்வதேச இயற்கை விவசாயம்-சிறுதானிய மாநாடு
பெங்களூருவில் சர்வதேச இயற்கை விவசாயம்-சிறுதானிய மாநாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:-
சிறுதானிய மாநாடு
கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் சர்வதேச இயற்கை விவசாயம்-சிறுதானிய மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வெளிநாடுகளில் வரும் பருவமழை காலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதை கடந்த 10 ஆண்டுகால மழை அளவை எடுத்து பார்த்து சரியான முறையில் கணிக்கிறார்கள். அதன் அடிப்படையில் விவசாயிகள் என்ன பயிரிட வேண்டும் என்பதையும் கூறுகிறார்கள். அவற்றுக்கான சந்தை வாய்ப்புகள், விலையையும் கூறி விடுகிறார்கள். அத்தகைய நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.
ஆலோசனைகள்
இங்கும் அதே போன்ற ஒரு வானிலை அறிக்கையை தயாரித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை கூற வேண்டும். இந்த பணியை விவசாயத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை அதிகரிக்க கடன் வழங்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய அளவில் கடனை வழங்கினால், அவர்கள் வெளியில் வட்டிக்கு கடன் வாங்க மாட்டார்கள்.
அதனால் விவசாயிகளுக்கு உரிய அளவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நபார்டு வங்கிக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த நிலையை ஏற்பட்டால் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 33 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறோம். விவசாயிகள் வித்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் விவசாயிகளின் 11 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட அனைத்து வகையான சிறுதானியங்களும்
உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வணிக நோக்கத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.
உணவு தானிய உற்பத்தி மற்றும் வணிக தேவைகள் இடையே சமநிலையை பராமரிக்காவிட்டால் வரும் காலத்தில் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கர்நாடகத்தில் கேழ்வரகு, சோளம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதனால் ரேஷன் கடைகளில் இவற்றை மக்களுக்கு வழங்குகிறோம். கேழ்வரகை கர்நாடக அரசே விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.
காலநிலை மாற்றம்
சர்வதேச சந்தைகளில் சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார்ப்படுத்தும் வகையில் விவசாய பல்கலைக்கழகங்கள் பணியாற்ற வேண்டும்.
காலநிலை மாற்றம், மண்ணின் தன்மையை பாதுகாத்தல், கூடுதல் நீர் பயன்பாட்டை குறைத்தல், ரசாயன உரங்களால் மண்ணின் சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், போலி விதைகள் பயன்பாட்டை தடுக்க பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
கண்காட்சி
இந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள் பிரகலாத்ஜோஷி, ஷோபா, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் உற்பத்தி பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளன. பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களுக்கு தேவையான சிறுதானிய பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.