ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஏப்ரல் 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு சம்மன் அனுப்ப பெங்களூரு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
2 பெண் அதிகாரிகள் மோதல்
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ரோகிணி சிந்தூரி. இவருக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் இடையே சமீபத்தில் மோதல் உருவானது. அதாவது ரோகிணி சிந்தூரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். குறிப்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வுடன் சமாதான பேச்சுவார்த்தை, பெங்களூருவில் பங்களா வீடு கட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ரோகிணி சிந்தூரிக்கு எதிராக கூறி இருந்தார்.
அத்துடன் ரோகிணி சிந்தூரி சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் தன்னுடைய முகநூலில் ரூபா வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரங்கள் தொடர்பாக 2 அதிகாரிகளும், தலைமை செயலாளரிடம் தனித்தனியாக புகார்கள் அளித்திருந்தனர். மேலும் ரோகிணி சிந்தூரி மற்றும் ரூபாவுக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ரூபாவுக்கு கோர்ட்டு சம்மன்
அதே நேரத்தில் தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவதாக ரோகிணி சிந்தூரி அறிவித்திருந்தார். ஆனால் ரூபா மன்னிப்பு கேட்காததால், பெங்களூரு 6-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரூ.1 கோடி கேட்டு ரோகிணி சிந்தூரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று பெங்களூரு 6-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரோகிணி சிந்தூரி தரப்பில் ஆஜரான வக்கீல், ரூபாவுக்கு எதிரான சாட்சி ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து, அடுத்த மாதம்(ஏப்ரல்) 26-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ரூபாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.