வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனாவா?


வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனாவா?
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? என்பதை கண்டறிய அவர்களின் ரத்தம், சளி மாதிரி புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேவனஹள்ளி:

முககவசம் கட்டாயம்

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக சீனாவில் வைரஸ் தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா நோயாளிகள் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள். இதையொட்டி இந்தியாவில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. உஷாராகியுள்ள மத்திய அரசு, கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.

மேலும் நேற்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கர்நாடகத்தில் உள்ளரங்கம், ஏ.சி. வசதியுள்ள அறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

புதிய வகை கொரோனாவா?

சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து 119 பேர் விமானம் மூலம் பெங்களூரு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இதனால் அவர்களின் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான், அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.

பாதிப்பு அதிகரிப்பு

மேலும் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 22-ந் தேதி பெங்களூருவில் 16 பேருக்கும், 23-ந் தேதி 10 பேருக்கும், 24-ந் தேதி 19 பேருக்கும், 25-ந் தேதி 22 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது நகரில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகாித்து வருவதை காட்டுவதாக உள்ளது.


Next Story