'லவ் ஜிகாத்' விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுக்கிறதா?; காங்கிரஸ் கேள்வி
அரசின் தோல்விகள் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ‘லவ் ஜிகாத்’தை பா.ஜனதா கையில் எடுக்கிறதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தோல்வி அடைந்துவிட்டது
வளர்ச்சியை கேட்காதீர்கள், விரோத போக்கை கைவிடாதீர்கள் என்பது பா.ஜனதாவின் தேர்தல் முழக்கம். இது தொண்டர்களுக்கான அறிவுரை. மத, விரோத போக்கை கையில் எடுத்து சட்டசபை தேர்தலில் செயல்பட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பா.ஜனதா அரசு வளர்ச்சியை ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த சாதனையும் நிகழ்த்தவில்லை என்பதை பா.ஜனதா வெளிப்படையாக ஒப்பு கொண்டுள்ளது.
'லவ் ஜிகாத்' பற்றி பேசுவதை பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கைவிட வேண்டும். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது பற்றி தயங்குவது ஏன்?. அரசின் தோல்விகள் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் 'லவ் ஜிகாத்' விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுக்கிறதா?.
பொருளாதார சிக்கல்
வளர்ச்சி, வேலையின்மை, பொருளாதார சிக்கல், விலைவாசி உயர்வு, சாலை குழியால் ஏற்படும் உயிரிழப்புகள், விவசாயிகள் தற்கொலை, ஊழல், பணி நியமன முறைகேடுகள் போன்றவை பா.ஜனதாவுக்கு சிறு விஷயங்கள். வேலையின்மை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தாலும், அதுபற்றி பேசாமல் லவ் ஜிகாத் குறித்து பேசுமாறு நிர்வாகிகளுக்கு நளின்குமார் கட்டீல் அறிவுரை கூறியுள்ளார். இது பா.ஜனதாவின் மோசமான அரசியல்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.