தகவல் தொடர்பு வசதிக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது
தகவல் தொடர்பு வசதிக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பெங்களூரு,
தகவல் தொடர்பு வசதிக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிக்காக ஜிசாட்-24 செயற்கைக்கோள், இஸ்ரோவில் உருவாக்கப்பட்டது. இது '24-கு' பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இதன் எடை 4,180 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோள் அதிக எடையிலானது என்பதால், பிரஞெ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. இத்துடன் மலேசியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மீசாட்-3டியும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து விட்டன.இதுபற்றி பிரெஞ்சு நிறுவனமான ஏரியன்ஸ்பேஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ஜூன் 22-ந்தேதி புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணி) ஏரியன்-5 ராக்கெட் பிரெஞ்சு கயானா, கொரு கயானா விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து 2 தொலைதொடர்பு செயற்கைக்கோள்களுடன் (மீசாட்-3டி, ஜிசாட்-24) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிசாட்-24 செயற்கைக்கோள், அதிக தரம் வாய்ந்த டெலிவிஷன், தகவல் தொடர்பு, ஒளிபரப்புச்சேவையை வழங்கும். இந்திய வாடிக்கையாளர்களின் டி.டி.எச். சேவையையும் சந்திக்கும்.
இந்த செற்கைக்கோள் பயன்பாட்டு சேவைகள் அனைத்தும் டாடா பிளே நிறுனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
இந்த டாடா பிளே, டாடா குழுமத்தின் டி.டி.எச். நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.