பணமதிப்பிழப்பு விவகாரம்; நொறுங்கிய முட்டையை திரும்ப ஒட்ட வைக்க வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்


பணமதிப்பிழப்பு விவகாரம்; நொறுங்கிய முட்டையை திரும்ப ஒட்ட வைக்க வேண்டாம்:  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
x
தினத்தந்தி 26 Nov 2022 9:58 AM IST (Updated: 26 Nov 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் கெடிகாரத்தினை பழைய நிலைக்கு கொண்டு சென்று ஓட வைக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இந்தியாவில் ரூ.15.40 முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது என மதிப்பிடப்பட்டு இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.

இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்க திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது.

அரசின் பொருளாதார கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இந்த விவகாரத்தில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 ரிட் மனுக்களை நீதிபதி எஸ். அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்கிறது. நீதிபதிகள் கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோரும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில், நீதிபதி கவாய் கூறும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆர்.பி.ஐ.யின் முதன்மையான பணி. ஆர்.பி.ஐ.யின் சட்ட பிரிவு 26(2) முன்னெடுத்து இருக்கப்பட வேண்டும். பணமதிப்பிழப்பு கொள்கையை முடிவு செய்ததில், ஆர்.பி.ஐ.யின் பங்கு உள்ளது என்பதில் விவாதமில்லை.

இந்த நடவடிக்கை, ஆர்.பி.ஐ.யின் சட்ட பிரிவு 26(2)-க்கு உட்பட்டு அதனுடன் ஒத்து போகவில்லை என மனுதாரர்கள் தெரிவித்து உள்ளனர். மனுதாரர்களின் இந்த மனுக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிக்க போகிறீர்கள்? இவை அனைத்தும் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார விவகாரங்கள். அதனை தொடாதீர்கள் என்று மட்டுமே நீங்கள் கூறுகிறீர்கள்.

எதிர்தரப்பினரின் எதிர்ப்பு மனுவுக்கு நீங்கள் அளிக்கும் பதில் என்ன? அவர்களுடைய பதிலுக்கு உங்களது பதில் என்ன? என கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதில் பல குறைபாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உங்களது கருத்துருவின்படி இலக்கை அடைந்து விட்டோம் என நீங்கள் வாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளதா? அல்லது இல்லையா? என எங்களிடம் தெரிவியுங்கள் என்று நீதிபதி கூறினார்.

இதுபற்றி அரசு வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி ஆஜராகி அளித்த விளக்கத்தில், வழக்கில் கெடிகாரம் திருப்பி, பழைய நேரம் காட்டும்படி ஓட செய்வது என்பது நொறுங்கிய முட்டையை திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வருவது போன்றது ஆகும். இந்த வழிகளால், எளிதில் அறிய கூடிய நிவாரணம் அளிக்க முடியாத சூழலில், கோர்ட்டு எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது என அவர் கூறியுள்ளார்.

பண மதிப்பிழப்பு என்பது தனிப்பட்ட பொருளாதார கொள்கை அல்ல. அது ஒரு சிக்கலான பண கொள்கை. முற்றிலும் வேறுபட்ட நடவடிக்கைகளே பின்பற்றப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) பங்கும் இதில் உள்ளது. நாங்கள், இங்கொன்றும், அங்கொன்றும் உள்ள கருப்புபணம் பற்றிய தேடலில் ஈடுபடவில்லை. இங்குமங்கும் உள்ள சில போலியான கரன்சிகளை தேடவில்லை. பெரிய அளவிலான விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

அதனால், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்பதற்காக உங்களது நோக்கமும் தவறானது என்று உயர்ந்த நிலையிலுள்ள நல்ல மனிதர் ஒருவரும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஆர்.பி.ஐ. தனியாக செயல்பட வேண்டும் என மனுதாரர்கள் வாதம் செய்கின்றனர். ஆனால், ஆர்.பி.ஐ. மற்றும் அரசு இணைந்து பணியாற்றும் செயலை, வளைந்து போக கூடிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவை இரண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் இணைப்பை கொண்டவை என்று கூறியுள்ளார்.

எனினும், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை வருகிற டிசம்பர் 5-ந்தேதிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story