புனித மண் சேகரித்து கெம்பேகவுடாவிற்கு பூஜை செய்வது பெருமை


புனித மண் சேகரித்து கெம்பேகவுடாவிற்கு பூஜை செய்வது பெருமை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனித மண் சேகரித்து கெம்பேகவுடாவிற்கு பூஜை செய்து கவுரவிப்பது பெருமை அளிக்கும் விஷயம் என்று மந்திரி கோபாலய்யா கூறினார்.

மண்டியா:

கெம்பேகவுடா சிலை திறப்பு

மண்டியா மாவட்டத்தில் உள்ள காளிகாம்பா கோவில் வளாகத்தில் வைத்து நாட பிரபு கெம்பேகவுடாவின் 108 அடி வெண்கல சிலை திறப்பு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா பேசும்போது கூறியதாவது:-

நாடபிரபு கெம்பேகவுடா ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காக மட்டும் பாடுபடவில்லை. அனைத்து சமுதாயத்தினருக்காகவும் பாடுபட்டவர். கல்வி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததில் கெம்பேகவுடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். பெங்களூருவை நிர்மாணித்த பெருமை அவருக்கு உண்டு. அவரது வெண்கல சிலையை திறப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவின்போது புனித மண் எடுத்து வந்து பூஜை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கெம்பேகவுடாவை கவுரவிப்பதற்காக செய்யப்படுகிறது.

புனித மண் சேகரிப்பு

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் புனித மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. நவம்பர் 6-ந் தேதி வரை இந்த புனித மண் எடுக்கும் பணி நடக்கிறது. 233 கிராமங்களில் இருந்து இந்த புனித மண் எடுக்கப்படுகிறது. மண்டியாவில் புனித மண் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநில அரசு சார்பிலும் இதற்கான ஒத்துழைப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல தீம் பார்க் அமைப்பதில் மாநில அரசு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான நன்கொடைகள் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story