எதிர்காலத்தை மாற்றி அமைப்பது இளைஞர்களின் வாக்குதான்
எதிர்காலத்தை மாற்றி அமைப்பது இளைஞர்களின் வாக்குதான் என்று தலைமை நீதிபதி வெங்கடேஷ் கூறியுள்ளார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் குவெம்பு கலையரங்கில் நேற்று முன்தினம் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை நீதிபதி வெங்கடேஷ், மற்றும் மாவட்ட கலெக்டர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அப்போது மாவட்ட தலைமை நீதிபதி வெங்கடேஷ் பேசியதாவது:- தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை. இதில் அனைவரின் பங்கும் முக்கியம். இது இந்திய குடிமகன்களின் கடமை. வாக்களிப்பது என்பது நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் ஒரு ஆயுதம். அதை உணர்ந்து இளைஞர்கள் வாக்களிக்கவேண்டும். விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் யாரும் வாக்களிக்காமல் இருக்க கூடாது. தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்று உறுதி மொழி ஏற்கவேண்டும். மக்கள் பணியாற்றுபவர்களுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாவட்ட அதிகாரிகள் புதிய வாக்காளர்களை தேடி பிடித்து அவர்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந்த ஆண்டில் புதிய வாக்காளர்களாக 6,500 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க கூடாது. கட்டாயம் வாக்களிக்கவேண்டும். இது உங்கள் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.