எனது கார் மீது முட்டை வீசியவர் காங்கிரஸ்காரர் அல்ல- சித்தராமையா பேட்டி
எனது கார் மீது முட்டை வீசியவர் காங்கிரஸ்காரர் அல்ல என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-என் கார் மீது முட்டை வீசியவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். அவர் மூலம் முட்டையை வீசியுள்ளனர். அந்த நபர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அவரை, தான் ஒரு காங்கிரஸ்காரர் என்று கட்டாயப்படுத்தி பேச வைத்துள்ளனர்.
நான் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். எனக்கு அசைவம் பிடிக்கும், அதனால் அதை சாப்பிடுகிறேன். அவர்களுக்கு சைவம் பிடித்தால் அதை சாப்பிடட்டும். இரவு அசைவம் சாப்பிட்டு காலையில் கோவிலுக்கு சென்றால் தவறு இல்லையாம். ஆனால் மதியம் அசைவம் சாப்பிட்டுவிட்டு இரவு கோவிலுக்கு சென்றால் அது தவறாம். இது என்ன நியாயம்?. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்ப அவர்களுக்கு உரிமை இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.