ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனு


ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனு
x

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:-

ஜெயலலிதாவின் உறவினர்

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை முடிந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் தண்டனையையும் அனுபவித்து விடுதலையாகி விட்டனர்.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் கர்நாடக அரசின் கருவூலத்தில் இருக்கும் அவரது பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 5-ந் தேதி கோர்ட்டில் நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் உறவினர்(அண்ணன் ஜெயராமனின் மகள்) ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி அவரது சொத்துக்களை தமிழ்நாடு கோர்ட்டு ஜெ.தீபாவிடம் ஒப்படைத்து தீர்ப்பு கூறியுள்ளது.

உரிமை கோரி மனு

அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் பொருட்களை ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கோரினார். அதற்கு நீதிபதி, முறையாக மனு தாக்கலை தாக்கல் செய்து ஆஜராகும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி கூறினார். அதற்கு நரசிம்மமூர்த்தி, இதுகுறித்து ஆவணங்களை பெற்று தாக்கல் செய்வதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்த மனு பெங்களூரு சிட்டி சிவில்-செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அதிகாரி பூங்காவனம், உறையால் மூடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story