அமர்நாத் புனித யாத்திரைக்கு விரிவான ஏற்பாடுகள்; கூடாரங்கள் நிறுவும் பணி தீவிரம்!


அமர்நாத் புனித யாத்திரைக்கு விரிவான ஏற்பாடுகள்; கூடாரங்கள் நிறுவும் பணி தீவிரம்!
x

ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், தற்காலிக கூடாரங்கள் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, இன்று ஜம்முவில் அமைக்கப்பட்டுள்ள அமர்நாத் தள முகாம் 'யாத்ரி நிவாஸில்' ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

"அமர்நாத் யாத்திரை என்பது மத அல்லது கலாச்சார முக்கியத்துவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. இந்த பகுதியின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கான போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர்(சுமார் 13,000 அடி உயரம்) உயரத்தில் இமயமலையின் மேல் பகுதியில், உள்ள சிவபெருமானின் குகைக் கோயிலுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், யாத்திரை செல்லும் மக்களுக்கான தற்காலிக கூடாரங்கள் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

"இந்த கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் 10 பேர் தங்கலாம். இது உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஏற்கெனவே 1200 கூடாரங்கள் இருக்கின்ற நிலையில், கூடுதலாக 500 கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த பணிகளில் ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் யாத்திரை முதன்முறையாக, ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story