நகராட்சி முன்னாள் உறுப்பினருக்கு சிறை தண்டனை
காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான நகராட்சி முன்னாள் உறுப்பினருக்கு சிறை தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உப்பள்ளி:-
ரூ.5 லட்சம் பெற்று
தார்வார் டவுன் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். தொழிலதிபர். இதேபோல் தார்வார்-உப்பள்ளி நகராட்சியின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஜமனால். இவர் சொந்த செலவுகளுக்காக மஞ்சுநாத்திடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் வாங்கி இருந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து மஞ்சுநாத் அவரிடம் கேட்டால், விரைவில் தருவதாக கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீகாந்த்தை சந்தித்த மஞ்சுநாத் ரூ.5 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மஞ்சுநாத்திடம் கொடுத்தார். அதை எடுத்து கொண்டு மஞ்சுநாத் வங்கிக்கு சென்றார். அப்போது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என கூறி அதிகாரிகள் காசோலையை திருப்பி கொடுத்தனர்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த்திடம் அவர் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீகாந்த் மீது தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மஞ்சுநாத்திற்கு ரூ.5 லட்சத்தை உடனடியாக வழங்க கோரி ஸ்ரீகாந்துக்கு உத்தரவிட்டார். அதை வழங்குவதாக கூறிய ஸ்ரீகாந்த் தலைமறைவானார்.
பிடிவாரண்டு
மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து தார்வார் புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை தேடி வந்தனர். இந்த நிலையில் உப்பள்ளியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, ரூ.5 லட்சத்தை வாங்கி கொண்டு காசோலை ேமாசடி செய்துவிட்டு, கோர்ட்டு உத்தரவையும் மீறியதால் அவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும், ரூ.5 லட்சத்தை உடனடியாக மஞ்சுநாத்திற்கு வழங்கிடவும் அவர் உத்தரவிட்டார்.