இந்தியாவின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் ஜம்ஷெட் ஜே இரானி காலமானார்!
டாக்டர் ஜம்ஷெட் ஜே இரானி 1985இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார்.
புதுடெல்லி,
நாட்டின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஜாம்ஷெட் ஜெ இரானி திங்கள்கிழமை(அக்டோபர் 31) இரவு ஜாம்ஷெட்பூரில் காலமானார். அவருக்கு வயது 86. இந்த தகவலை டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பத்மபூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். அவர் இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அன்போடு அழைக்கப்படும் நபர். அவரது குடும்பத்தினருக்கு டாடா ஸ்டீல் குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது' என்று தெரிவித்துள்ளது.
ஜூன் 2, 1936இல், ஜி.ஜி. இராணி மற்றும் குர்ஷித் இரானியின் மகனாக ஜம்ஷெட் ஜே இரானி பிறந்தார். அவர் இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் 1963இல் உலோகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
பத்ம விபூஷன் ஜாம்ஷெட் இரானி 1963 இல் பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவரது கனவு எப்போதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதாக இருந்தது.
அவர் 1968 இல் இந்தியா திரும்பி, டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தில்(டாடா ஸ்டீல்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட் துறை இயக்குனரின் உதவியாளராக பணிபுரிந்தார்.
அவர் 1985 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார். 43 ஆண்டுகள் அவர் டாடா நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.டாடா ஸ்டீல் குழுமத்தில் இருந்து இரானி ஜூன் 2011 இல் ஓய்வு பெற்றார்.