ஜனார்த்தன ரெட்டி தனது முடிவை மாற்ற வேண்டும்
புதிய கட்சி தொடங்கியவர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால், ஜனார்த்தன ரெட்டி தனது முடிவை மாற்றி கொள்ள வேண்டும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
புதிய கட்சி தொடக்கம்
பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி நேற்று கல்யாண ராஜ்ய பிரகதி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அவர் புதிய கட்சி தொடங்கி இருப்பதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
முடிவை மாற்ற வேண்டும்
ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர், கர்நாடகத்தில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கவும், கட்சியை வளர்க்கவும் கடுமையாக உழைத்தவர். ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பதால் பா.ஜனதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் பா.ஜனதாவில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பல்லாரியில் அவரை சமீபத்தில் சந்தித்து பேசினேன். அவர் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புவது குறித்து முதல்-மந்திரி மற்றும் கட்சி தலைவர்களிடம் எடுத்து கூறினேன். புதிய கட்சி தொடங்கிய பல தலைவர்கள் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே ஜனார்த்தன ரெட்டி பா.ஜனதாவில் இருக்க வேண்டும். புதிய கட்சி தொடங்கி வெற்றி பெற சாத்தியமில்லாததால், ஜனார்த்தன ரெட்டி தனது முடிவை மாற்ற வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.