ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் அடித்து கொலை
சிட்லகட்டாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரை அடித்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்பள்ளாப்பூர்:
ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் கொலை
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா கன்னமங்களா கிராமத்தை சேர்ந்தவர் சிக்க ஆஞ்சனப்பா (வயது 38). ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பிரமுகரான இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிட்லகட்டாவுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் நாராயண தாசரஹள்ளி பகுதியில் வந்தபோது, மோட்டர்ா சைக்கிளை மர்மநபர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் சிக்க ஆஞ்சனப்பாவை அவர்கள் இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிட்லகட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான சிக்க ஆஞ்சனப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதத்தில் சிக்க ஆஞ்சனப்பாவை மர்மநபர்கள் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிட்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.