ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை
ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள பிரபாகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பெங்களூரு:
ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் பிரபாகர் ரெட்டி. இவர் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளராக பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரபாகர் ரெட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும், அதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். பிரபாகர் ரெட்டிக்கு சொந்தமான எலெக்ட்ரானிக் சிட்டி அருகே மைலசந்திராவில் உள்ள வீடு, எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் அமைந்திருக்கும் அலுவலகம் மற்றும் கோனனகுண்டே பகுதியில் இருக்கும் குடியிருப்பு ஆகிய இடங்களில் தலா 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று பகல் முழுவதும் நடைபெற்ற சோதனையின்போது ரியல் எஸ்டேட் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர். ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வேட்பாளருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், குடியிருப்புகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பலமுறை வரி ஏய்ப்பு செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமி குற்றச்சாட்டு
இதற்கிடையே கட்சி வேட்பாளருக்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை, சோதனை நடத்துவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரபாகர் ரெட்டி ஒரு தொழில் அதிபர் ஆவார். அதனால் அவருக்கு வருமான வரி சோதனை என்பது சகஜமானது தான். மேலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் எதிர்க்கட்சிகளாக இருந்தால், இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். தற்போது பிரபாகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதற்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்த 2 மாதங்களுக்கு இதுபோன்ற ஐ.டி. சோதனைகள் நடக்க தான் செய்யும். அதை கண்டு கொள்ள தேவையில்லை. அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.