மந்திரி நாராயணகவுடாவை தாக்க முயன்ற ஜனதா தளம்(எஸ்) கட்சியினர்
ஹலகூர்:-
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மந்திரி நாராயணகவுடா போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவையொட்டி கே.ஆர்.பேட்டை தாலுகா பன்னேனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஏராளமான வாக்காளர்கள் உயிருடன் இருக்கும் கோழி மற்றும் சேலைகளுடன் மந்திரி நாராயணகவுடாவின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் நாராயணகவுடாவின் வீட்டின் முன்பு அவற்றை வீசினர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
அதையடுத்து அவர்கள் அப்பகுதியில் பன்னேனஹள்ளி கிராமத்தில் உள்ள பா.ஜனதா பிரமுகர் வீட்டின் முன்பு சேலைகளையும், கோழிகளையும் வீசினர். மேலும் அவர்கள் நாங்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும், உங்களது(நாராயணகவுடா மற்றும் பா.ஜனதாவினர்) சேலைகள் மற்றும் கோழிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினர்.
இந்த நிலையில் அங்குள்ள வாக்குச்சாவடிக்கு மந்திரி நாராயணகவுடா வாக்களிக்க சென்றார். அப்போது அவருக்கு எதிராக ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கோஷம் எழுப்பினர். அவர்களை மந்திரி நாராயணகவுடா எச்சரித்தார். அப்போது அவர்கள் ஆவேசமாக வந்து மந்திரி நாராயணகவுடாவை தாக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை பா.ஜனதாவினர் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் மந்திரி நாராயணகவுடா ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.