ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்ன ரத யாத்திரை தொடங்குகிறது
அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந்தேதி முதல் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்ன ரத யாத்திரை தொடங்குகிறது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
மைசூரு:
குமாரசாமி பேட்டி
மைசூருவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் செயலாளர்கள் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமி மைசூருவுக்கு நேற்று வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கன்னட ராஜ்யோத்சவா தினமான நவம்பர் 1-ந்தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பாக பஞ்சரத்ன ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்த ரத யாத்திரை கோலார் மாவட்டம் முல்பாகல் டவுனில் இருந்து தொடங்குகிறது. இந்த ரத யாத்திரை வரும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் வரை அதாவது 6 மாதங்கள் வரை மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.
இதன்மூலம் மக்களுக்கு கட்சியின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள், நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை மேற்கொள்கிறது என்பதை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எங்கள் ஆட்சி வந்தால் தெலுங்கானா அரசு மாதிரி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு அல்லது தனியார் நிறுவன வேலைகள், தனியாக தொழில் செய்பவர்களுக்கு நிதி உதவி போன்ற சலுகைகள் செய்து தரப்படும். வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் தலித் மக்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக தெலுங்கானா அரசு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கு சேகரிப்போம்
நாம் மற்றவர்களை கேலி கிண்டல் செய்வதை விட்டுவிட்டு கட்சி பணிகளில் ஈடுபடும்படி தொண்டர்கள், உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சரத்ன ரதயாத்திரை மூலம் வரும் 2023-ம்
ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களிடம் வாக்குசேகரிப்போம்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி செயலாளர்களின் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும், கிராம மக்களை எப்படி கவர வேண்டும், கிராம மக்களுக்கு கட்சியின் சலுகைகளை பற்றி எப்படி தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் விவசாயிகளின் பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் அந்த நாட்களில் பந்த ரத்ன ரத யாத்திரை நடக்காது. அந்த மாநாடு முடிந்த பின் மீண்டும் ரத யாத்திரை தொடங்கும்.
இந்த யாத்திரைக்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.