கட்சியை கலைக்க போவதாக கூறி இருப்பதால் குழப்பம் ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம்; டி.கே.சிவக்குமார்அழைப்பு
கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருப்பதால், குழப்பம் அடைந்துள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம்
ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார். குமாரசாமியின் இந்த பேச்சால், அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் காங்கிரசில் சேரலாம். அந்த கட்சி தொண்டர்களுக்கு நானே அழைப்பு விடுக்கிறேன்.
எனது கனகபுரா தொகுதியில் இருந்து மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருப்பவர்கள் காங்கிரசில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி மீது நான் எந்த குற்றச்சாட்டும் கூறுவதில்லை, அந்த கட்சியின் தலைவர்களுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறுவது உண்மை இல்லை.
சண்டை போட முடியாது
ஏனெனில் சமீபமாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை. குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைப்பதாக தனது வாயால் சொல்லி முடித்து விட்டார். அந்த கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாது என்று நான் சொல்லவில்லை.
அந்த கட்சி தலைவர்கள் ஒரு மாதிரியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். அரசியலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சி மற்றும் என்னுடைய நிலைப்பாடு ஆகும். ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் மென்மை போக்கை கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்காக, தினமும் காலையில் எழுந்தவுடன், அந்த கட்சி தலைவர்களுடன் என்னால் சண்டை போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கும் பங்கு
பின்னர் நேற்று மதியம் கலபுரகி விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பாத்திரம் இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். முதல்-மந்திரியும் கூறி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான நபர்கள், ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பெரிய முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது.
அரசு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் ஆதரவு இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியமே இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பங்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி. இதனை மூடி மறைக்கவே போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது, என்றார்.