கேரளாவில் வேகமாக பரவும் ஜே.என்.1 வகை கொரோனா.. அறிகுறிகள் என்ன? மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்கள்
கேரளாவில் பரவும் புதுவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருவனந்தபுரம்,
உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கேரளாவில் எதிர்பாராதவிதமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதே இதற்கு காரணம். ஒரே மாதத்தில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33-ல் இருந்து ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் பதிவாகும் மொத்த கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் கேரளாவில் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பல முறை தனது உருவத்தை மாற்றி இருக்கிறது. அந்த வகையில், உருமாறிய ஒமைக்ரான் வைரசில் இருந்து உருமாறியதுதான் இந்த ஜே.என். வகை வைரஸ். இந்த வைரஸ் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பர்க் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 38 நாடுகளில் இவ்வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, மூக்கடைப்பு, தலைவலி, மூச்சுவிட சிரமம் ஆகிய வழக்கமான அறிகுறிகளுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் இந்தியாவிற்குதான் புதியது என்று கூறும் தொற்றுநோய் வல்லுநர்கள், விழிப்போடு இருப்பதோடு முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, தேவையெனில் சிகிச்சையை பெறவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
வைரஸ் பரவலுக்கு மத்தியில், கேரளாவில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
கேரளாவில் பரவும் JN 1 கொரோனா.. "வயிற்றுப்போக்கு வந்தால் உஷார்" - மருத்துவர்கள் சொல்லும் பகீர் தகவல்கள் #Kerala |#JN1Corona | #ThanthiTV pic.twitter.com/mAiyGcxLk5
— Thanthi TV (@ThanthiTV) December 16, 2023