பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் சரியாக செயல்படாத கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் கூட்டாக பெங்களூரு விதான சவுதாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூரு:-

ஆதரவு அளிக்கும்

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததை கண்டித்து பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டாக பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடா மற்றும் இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் எடியூரப்பா பேசியதாவது:-

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்கிறது. இதை கண்டிக்கிறேன். காவிரி விவகாரத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஆதரவு அளிக்கும்.

நிறுத்த வேண்டும்

இப்போதாவது காவிரி விவகாரத்தில் மாநில அரசு செய்த தவறுகளை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிடும். இதற்கு மாநில அரசே காரணம். தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பேசும்போது, 'கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச வேண்டும். ஆனால் இதற்கு கர்நாடக அரசு தயாராக இல்லை. காவிரி நீரை பாதுகாக்கும் வரை நமது இந்த போராட்டம் ஓயாது' என்றார்.

அரசியல் செய்யவில்லை

குமாரசாமி பேசுகையில், 'கர்நாடகத்திற்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்கிறது. பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின்போது நல்லாட்சி நிர்வாகத்தை நடத்தினேன். விவசாயிகள் நலனை இந்த அரசு புறக்கணிக்கிறது. காவிரி விவகாரத்தில் இந்த அரசு சரியான முறையில் செயல்படவில்லை. இதை கண்டிக்கிறேன். தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பை ஆராய்ந்து நீர் திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட இரு கட்சிகளின் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story