ஜோக் நீர்வீழ்ச்சியை ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்


ஜோக் நீர்வீழ்ச்சியை ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
x

தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஜோக் நீர்வீழ்ச்சியை ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

சிவமொக்கா;

ஜோக் நீர்வீழ்ச்சி

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் ஷராவதி நீர்தேக்க பகுதியில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 5 கிளைகளாக பிரிந்து தண்ணீர் கொட்டுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஜோக் நீர்வீழ்ச்சிக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மழை எதுவும் பெய்யாததால் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு போய் கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்த அளவில் தான் இருந்தது.

5 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்

இந்த நிலையில் தற்போது சிவமொக்கா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் குவிந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஜோக் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர். மேலும் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

தொடர் கனமழை

சாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டுவதால், பின்வரும் நாட்களில் ஜோக் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகளவு வருகை தருவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story