மராட்டியம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து எங்களிடம் வரக்கூடாது - ஏக்நாத் ஷிண்டே


மராட்டியம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து எங்களிடம்  வரக்கூடாது - ஏக்நாத் ஷிண்டே
x

சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து எங்கள் கட்சிக்கு வரக்கூடாது என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மும்பை,

நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர்(சஞ்சய் ராவத் ) தவறு செய்யவில்லை என்றால், ஏன் பயப்படுகிறார். மகா விகாஸ் அகாடியில் மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து எங்களிடம் அல்லது பாஜக கட்சிக்கு வரக்கூடாது.

அமலாக்கத்துறை முன்பு விசாரணை நடத்தியது. மத்திய அரசிற்கு பயந்து அமலாக்கத்துறை செயல்பட்டால் சூப்ரீம் கோர்ட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறையினர் அவர்களின் பணியை செய்து வருகின்றனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story