முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம், கடலை மிட்டாய்; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம், கடலை மிட்டாய்; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு முட்டை

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இதுதவிர வாழைப்பழம், கடலை மிட்டாயும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் முட்டை வழங்குவதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில் சில மாணவ, மாணவிகள் முட்டை வாங்கி சாப்பிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அத்துடன் சில அரசு பள்ளிகளில் முட்டை கேட்கும் மாணவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மிட்டாயை கட்டாயப்படுத்தி வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வாழைப்பழம், கடலை மிட்டாய்

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை கமிஷனர் ஆர்.விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அரசு பள்ளிகளில் நடந்து வரும் பிரச்சினைகள் பற்றி பள்ளி கல்வித்துறையின் கவனத்திற்கும் வந்தது. இந்த திட்டம் பற்றி சரியான தகவல்களை அளிக்கும்படி வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, அரசு பள்ளிகளில் மதிய உணவின் போது முட்டை கேட்டால் மாணவர்களுக்கு கண்டிப்பாக முட்டை வழங்க வேண்டும். முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்க வேண்டும். முட்டை விலை உயர்வை காரணம் காட்டி முட்டை கேட்கும் மாணவர்களுக்கு, வாழைப்பழம், கடலை மிட்டாயை கொடுக்க கூடாது. இதனை ஒவ்வொரு அரசு பள்ளிகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.


Next Story